உல்லாச சுற்றுலாவில் காட்டு யானைகள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

உல்லாச சுற்றுலாவில் காட்டு யானைகள்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம். தமிழக ஆந்திரா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தர்மபுரி,  கிருஷ்ணகிரி, மல்லானூர் வழியாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதிக்கு வருகை தந்து அங்குள்ள ஏரியில் முகாமிட்டு இருந்தது.

யானைகளை  காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், யானைகள் ஏரியிலிருந்து வெளியேறி ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அது தோல்வியில் முடிகின்றது.


இந்நிலையில் நேற்று 16-ஆம் தேதி இரண்டு யானைகளும் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் தஞ்சம் அடைந்தன, பின்னர்  யானைகள் அங்கிருந்து வெளியேறி ஏலகிரி கிராமம் அருகில் பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்துள்ளது. வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட போராடி வருகின்றனர்.


ஆனால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் யானையை துன்புறுத்தும் வகையில் அது முன்பு நின்று செல்பி எடுப்பதும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் யானைகள் ஆக்ரோசமாக  சுற்றித்திரிந்து வருகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று ஹாரன் அடித்தாலும், யானைகளை துன்புறுத்தும் வகையில் ஈடுபட்டாலும் அவர்களுடைய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.


மாவட்டத்தில் உலா வரும் இரண்டு காட்டு யானைகள் இதுவரை 6 பேரை மிதித்து கொன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அருகே கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரை செல்பி எடுக்க முயன்ற போது யானை தும்பிக்கையால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் நகரப் பகுதியான லட்சுமி நகர், அண்ணண்டபட்டி, ஆசிரியர் நகர் ஆகிய நகரப் பகுதியில் மூகாம்பிட்டுள்ளது. அங்குள்ள ஏரியில் உல்லாசமாக குளித்து ஆட்டம் போட்டு வருகிறது. ஆபத்தை உணராமல் யானைகளை  காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பகுதி மக்கள் குவிந்து வருவதால் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சி இலட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வழி தவறி வந்த யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகிய துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நிச்சயமாக யானைகள் ஒரு வழியாக காட்டுக்குள் விரட்ட எதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.


- ஆம்பூர் செய்தியாளர்  கௌதம் கார்த்திக். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/