திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்றதலைவர் பூசாராணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் திமுகவை சேர்ந்த 8 வார்டு உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை ஒருவர் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசித்த போது அதில் 12 வது தீர்மானமாக 2வது மற்றும் 3வது வார்டு பகுதியில் புதியதாக வீட்டு மனை அமைப்பதற்கான ஒப்புதல் தீர்மானம் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இரண்டாவது வார்டு பகுதியில் இருந்ததை 3வது வார்டில் மாற்றியுள்ளதால் மன்ற தலைவரிடம் அதிமுக 1 வது வார்டு உறுப்பினர் சரவணன் விளக்கம் கேட்டு பேசினார்.

அப்போது அதிமுக 2 வது வார்டு உறுப்பினர் பரிமளா என்பவரின் கணவர் முருகவேல் மன்ற கூட்டத்திற்கு வெளியில் இருந்து கேள்வி எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 1வது வார்டு உறுப்பினர் சரவணன்(அதிமுக) என்பவர் நாற்காலிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர் செல்வராஜ், மன்ற தலைவர் பூசாரானி உட்பட 8 திமுக உறுப்பினர் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு மன்ற அரங்கத்தில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள்(அதிமுக) மன்ற கூட்டத்தை நடத்த வலியுறுத்தி பேரூராட்சி அலுவலக வளாக நுழைவாயில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிக்கை நோட்டீஸ் போர்டில் ஒட்டியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரப்பரப்பான சூழல் காணப்பட்டது.

No comments:
Post a Comment